Friday, April 8, 2011

* கேட்காத சத்தம்

 


ஊருக்கு உதவிடும்
நல்ல மனிதன் நீ!

ஏழைகளின் பசியை போக்க
நினைக்கும் மனிதாபிமானி நீ!

பெற்றோரின் ஆசையை
தீர்த்துவைக்கும் மகன் நீ!

கடமையை
தவறாமல் செய்வதில் கதிரவன் நீ!
*

சோம்பல் இல்லாத உழைப்பாளி
வீண் செலவை தள்ளிவைத்து
குடும்பச் செலவிற்கு பணம் தரும் கணவன் நீ!

மனைவியின் தேவை
பணம் மட்டும் அல்ல கணவா!!!

நல்ல- மனிதன், மகன்,
அண்ணன், தம்பி, நண்பன் என இருந்து
அனைத்து உறவுகளுக்கும் இன்பம் தருபவனே!
மனைவியின் வீட்டுத் தேவைகளையும் தீர்த்து வைப்பவனே!
*

மங்கை என் உள்ளம் சிறியதுதான்?
ஆனால் அதில் உதிக்கும் ஆசைகள் பெரியது!
அவை ஒன்றும் பேராசை இல்லை?
அத்தனையும் கணவனிடம் மனைவி
எதிர்பார்க்கும் சராசரி ஆசைதான்!
*

ஒவ்வொரு காலையும் மாலையும்
நீ தரும் ஆசை முத்தமும்

அவ்வப்போது கிடைக்கும்
உன் அன்பு முத்தமும்

அவசரம் இன்றி
நீ என்னுடன் செலவழிக்கும் நேரமும்

உன் கைகளின் அ்ரவணைப்பும்
கட்டில் மேல் முணுமுணுப்பும்

என் வேலைகளின் இடையே
நீ வந்து செய்யும்
சின்னச் சின்ன சில்மிஷங்களும்

எதிர் பாரா நேரத்தில்
கட்டி அணைத்து முத்தமிடுவதும்

எதிர் பார்க்கும் நேரத்தில்
ஏங்க வைத்து வேடிக்கை பார்ப்பதும்

அந்தி வரும் நேரத்தில்
உன் கையோடு கை சேர்த்துக்கொண்டு
நடைபாதை அழைப்பதும்

நிலாவரும் நேரம்
மெல்லிய தென்றலோடு
பார்வைகளை பரிமாற்றுவதும்

உன் மார்பில் நீர் சிந்தும் - என்
விழிகளைத்  துடைத்து என்னை - உன்
மார்போடு அணைத்து - நீ
ஆறுதல் கூறும் நிமிடமும்

உணவினை ஊட்டிடச்
சொல்லி அடம் பிடித்து
எனக்கும் ஊட்டி விட்டு
ஆனந்தப்படுத்தும் வேளைகளும்

என் மடிமீது தலைவைத்து
கேசத்தை கோதவிட்டு
நீ உறங்கும் இரவுகளும்

எனக்கு முன்னே எழுந்து
தேனிருடன் என்னை நீ எழுப்பும் காலைகளும்

நான் எழுதும்
கவிதைகளைப் படித்து இரசித்து
முத்தத்தை நீ பரிசாய்த்தரும் தருணங்களும்

என் காது மடல்களை
நீ வருடும் சுகங்களும்

என் அங்கத்தில்
உன் பற்கள் பதிக்கும் தடங்களும்

நான் தூங்கிய பின்
விழித்திருக்கும் உன்
காமத்தை துரத்தவும் இயலாமல்
என்னை எழுப்பவும் முடியாமல்
எழும்பிச் சென்று
காற்றைத் தீண்டச் சொல்லி
கண்மூடி நிற்கும் உன்னை
கட்டில் மேல் காணாமல்
தேடி வந்து கட்டி அணைத்து
கட்டிலுக்கு அழைத்து
தாகத்தை தனிக்க
விடியும் வரை விழித்திருக்கும் நாட்களும்

வீட்டு வேலை
செய்து கொண்டிருக்கும் என்னை
அவசரமாய் வெளியில் அழைத்துச் சென்று
விரும்பியதை வாங்கச் சொல்லி
யாரேனும் இருக்கிறார்கள்
என்று கூடப்  பார்க்காமல்
உன்னை கட்டிப்பிடிக்க வைக்கும் படி
செய்யும் நிகழ்வுகளும்

இன்னும் -
எத்தனை எத்தனையோ ஆசைகள்
என் மனதுக்குள் பிறந்து
இறந்து கொண்டிருக்கின்றது

இவையேதும் புரியாமல்
என் மனமும் அறியாமல்
வாழ்கின்றாய் நீ!
*

தாலி கட்டியதோடு
முடிந்தனவா நம் பந்தம்?
அது அல்லவா ஆரம்பம்

தாரமாய் ஏற்ற பின்னும்
தள்ளிவைப்பது ஏன்?

அருகிலே இருந்து கொண்டும்
விலகிச் செல்வது ஏன்?
*

நீ நல்லவன் தான்?
அதனால் தான்
உன்மேல் ஆசை அதிகமாகிறது!
*

கனவினில் கூட
என்னை தீண்டாமல் வாட்டுகிறாயே!

உன் விழியினாலே எனக்குள்
தீயை மூட்டுகிறாயே!

உன்னை விட்டு என்னை
தனியே வைத்து பூட்டுகிறாயே!

உன் மனதில் நான் இல்லை என்பதை
வெளிப்படையாய் காட்டுகிறாயே?
*

தமிழில் -
எத்தனை வார்த்தைகள் இருந்தென்ன!
இரண்டு மூன்று வார்த்தைக்குமேல்
என்னுடன் நீ பேசுவதில்லையே?

சமையல் தெரிந்தென்ன? ருசித்துச் சாப்பிட
நீ வருவதில்லையே

கட்டில் இருந்தென்ன மஞ்சத்தில் கொஞ்ச
நீ தயாராய் இல்லையே

இரவு
வந்தென்ன? உன் மடிமீது தூங்க
என்னை அனுமதிக்கவில்லையே!

இளமை
இருந்தென்ன? அனுபவிக்க
நீ வரவில்லையே!
*

நிதமும் ஒன்று
கேட்க வருவேன்?
உன் விழியை பார்த்ததும்
என் இதழ் மூடி விடுவேன்!
*

எதையும் உன்னிடம்
நேரடியாகச் சொல்லா முடியாமல்
மனதுக்குள் தாங்காமல்
அழுகின்றேன் நான்
*

கண்ணீரை எனக்கு
பரிசாய்த் தந்தாய்
பரவாயில்லை

காரணத்தையேனும்
காதோரம் கூறு
காத்திருக்கிறேன்

இல்லாவிடிலும்
பரவாயில்லை
காத்திருப்பேன்
*
அன்புக் கணவனே..
உன்னை நான் நேசிக்கின்றேன்
என்னை நீ நேசிக்கும் வரை - காத்திருப்பேன்

அந்த நாள் வரும் வரை
இன்னும் என் மனதுக்குள்
ஆசைகள் பல விதைத்துவைப்பேன்
*

என் ஆசை என்றும் தீராது
உன் மேல் வைத்த காதலும் சாகாது
*

முத்தங்களுடன்
முடிக்கிறேன்

இப்படிக்கு...
- உன் அன்பு மனைவி -


1 comment: